இலங்கையில் சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் தொடர்பான பல்கலைக்கழக மாணவர்களுக்கான கருத்தரங்கை ஆரம்பித்தது BRISL
இலங்கையின் மூன்று பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கருத்தரங்கில், சீனாவின் பட்டுப்பாதை முன்னெடுப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் ஆராயப்படுகின்றன.
மூன்று பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 மாணவர்கள் பங்கேற்பு; பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு
கொழும்பு, ஒக்டோபர் 19: “இலங்கையும் பட்டுப்பாதை முன்னெடுப்பும்: நிலையான அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த வாய்ப்புகளை உருவாக்குதல்” (Sri Lanka and the Belt and Road Initiative: Building Synergies for Sustainable Development) என்ற தலைப்பிலான இரண்டு நாள் பல்கலைக்கழக மாணவர் கருத்தரங்கை, Belt and Road Initiative Sri Lanka (BRISL) கொழும்பு அமாரி ஹோட்டலில் ஆரம்பித்துள்ளது.
கொழும்புப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 25 இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம், சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேசக் கற்கைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
சீனாவின் பட்டுப்பாதை முன்னெடுப்பு (Belt and Road Initiative – BRI) தொடர்பான மாணவர்களின் புரிதலை ஆழப்படுத்துவதுடன், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் அதன் தாக்கங்கள் மற்றும் வர்த்தகம், முதலீடு, உட்கட்டமைப்பு, இணைப்புத்திறன் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் உருவாகும் வாய்ப்புகளை ஆராய்வதும் இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.
இரண்டு நாட்களிலும் நடைபெறும் அமர்வுகளில் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன, கலாநிதி ஜோர்ஜ் ஐ. எச். குக், அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே, கலாநிதி பாலித டி. பி. கொஹொன மற்றும் கலாநிதி வகீஷா குணசேகர உள்ளிட்ட கல்வியாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் உரையாற்றவுள்ளனர்.
BRISL பணிப்பாளர் மாயா மஜுரன், “உயர்தரப் பட்டுப்பாதை முன்னெடுப்பும் இலங்கையும்: நிலையான அபிவிருத்திக்கான புதிய பாதைகளைத் திறத்தல்” (High-Quality BRI and Sri Lanka: Unlocking New Pathways for Sustainable Development) என்ற தலைப்பில் விளக்கவுரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
பட்டுப்பாதை முன்னெடுப்பின் வரலாற்று மற்றும் இராஜதந்திரப் பரிமாணங்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையின் மூலோபாயத் தன்னாட்சி, அபிவிருத்திக்கான நிதியுதவி, கடன் மறுசீரமைப்பு, பொருளாதார வாய்ப்புகள் மற்றும் மனித வள அபிவிருத்தி ஆகிய விடயங்கள் இவ்வமர்வுகளில் ஆராயப்படவுள்ளன.
இக்கருத்தரங்கின் முக்கிய அம்சமாக, ஹுவாவே டெக்னொலஜீஸ் லங்கா (Huawei Technologies Lanka), கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo) மற்றும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் (Colombo International Container Terminals – CICT) ஆகியவற்றுக்கான கல்விசார் கள விஜயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், முக்கிய உட்கட்டமைப்பு முதலீடுகள், துறைமுகச் செயற்பாடுகள் மற்றும் பிராந்திய வர்த்தக, தளவாட மையமாக இலங்கை வளர்ச்சியடைந்து வரும் விதம் ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
கல்விசார் கற்றலையும் நடைமுறை அனுபவத்தையும் இணைப்பதுடன், பட்டுப்பாதை முன்னெடுப்புடன் தொடர்புடைய வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து தகவல்களின் அடிப்படையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
கல்விசார் தகைமைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாணவர்களிடையே அர்த்தமுள்ள கல்விசார் கலந்துரையாடல்களையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பட்டுப்பாதை முன்னெடுப்பு இலங்கையின் நிலையான அபிவிருத்தியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை இளம் கல்வியாளர்கள் ஆராய்வதற்கும், சர்வதேசக் கூட்டாண்மைகள் பொருளாதார வளர்ச்சிக்கும் பிராந்திய இணைப்புத்திறனுக்கும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இக்கருத்தரங்கு ஒரு தளமாக அமைகிறது.
editor