சார்க் நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையின்மை பிராந்திய ஒருங்கிணைப்புக்குத் தடையாக உள்ளது – ஜயநாத் கொலம்பகே
சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையின்மை தெற்காசியாவின் பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குப் பிரதான தடையாக இருப்பதாக முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கருத்தரங்கில் உரையாற்றிய அவர், இந்தியா–பாகிஸ்தான் போட்டி மனப்பான்மை, போதிய கடல்சார் உட்கட்டமைப்பு இல்லாமை மற்றும் பிராந்திய இணைப்புவசதிகளின் குறைபாடுகள் ஆகியவற்றை முக்கிய சவால்களாகச் சுட்டிக்காட்டினார். இலங்கை தனது பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கும் தெளிவான தேசிய மூலோபாயத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் (SAARC) அமைப்பின் முன்னேற்றத்திற்குப் பிரதான தடையாக உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையின்மை காணப்படுவதாகவும், இதனால் அந்தப் பிராந்திய அமைப்பினால் தனது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
“பிராந்திய ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டு, சார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA) கைச்சாத்திடப்பட்ட போதிலும், நம்பிக்கையின்மை மேலதிக முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்ததால் அந்த முன்னேற்ற வேகம் படிப்படியாகக் குறைந்தது” என அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தொடர்ச்சியான போட்டி மனப்பான்மை, பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கொலம்பகே சுட்டிக்காட்டினார்.
உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கைப் பற்றாக்குறை, போதிய கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மையங்களுடன் போதிய போக்குவரத்து மற்றும் இணைப்புவசதிகள் இல்லாமை ஆகியவற்றை அவர் பிராந்திய ஒருங்கிணைப்புக்கான முக்கிய தடைகளாக அடையாளப்படுத்தினார்.
இலங்கைக்கான ஒரு பாதை ஒரு மண்டல முன்முயற்சி அமைப்பினால் ( Belt and Road Initiative Sri Lanka (BRISL) ) கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையும் பட்டுப்பாதை முன்முயற்சியும்: நிலைபேறான அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புகளை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான பல்கலைக்கழக மாணவர்களுக்கான கருத்தரங்கு 2026” நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஆழமாக வேரூன்றிய இந்த தடைகள் தீர்க்கப்படாவிட்டால், தெற்காசியா அர்த்தமுள்ள பொருளாதார ஒருங்கிணைப்பை அடைவதில் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்ளும். இதனால் இப்பிராந்தியத்தின் மகத்தான பொருளாதார ஆற்றல் முழுமையாகப் பயன்படுத்தப்படாத நிலை நீடிக்கும்” என அவர் கூறினார்.
இலங்கை போதிய கடல்சார் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை பிராந்தியத்தின் பொருளாதாரச் செயல்திறனைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உலக வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை தனது தேசிய பொருளாதார முன்னுரிமைகளையும் பரந்த பிராந்திய பாதுகாப்புக் கவலைகளையும் நடைமுறைச் சாத்தியமான முறையில் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பு சார்ந்த விடயங்கள் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளுக்கு மேலாதிக்கம் செலுத்தாத வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஏனைய நாடுகளின் பாதுகாப்பு நலன்களைவிட எமது சொந்த பொருளாதார அபிவிருத்தி குறித்து நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்த அவர், தெளிவானதும் எதிர்காலத்தை நோக்கியதுமான தேசிய மூலோபாயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் இலங்கை எந்த நிலையை அடைய விரும்புகிறது என்பது குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன், ‘இலங்கை முதலில்’ (Sri Lanka First) என்ற அணுகுமுறையை நாடு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தரங்கில் BRISL அமைப்பின் பணிப்பாளர் மாயா மயூரன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கைக்கான நாட்டுப் பொருளாதார நிபுணர் கலாநிதி வாகிஷா குணசேகர மற்றும் Awarelogue Asian Institute நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரான கலாநிதி ஜோர்ஜ் ஐ. எச். கூக் ஆகியோரும் உரையாற்றினர்.
கருத்தரங்கின் நிகழ்ச்சி நெறியாளராக BRISL அமைப்பின் ஸ்தாபகப் பணிப்பாளர் யசிரு ரணராஜா செயற்பட்டார்.
editor