பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள் ‘அதிக ஆபத்து’ பட்டியலில் - புதிய ஆய்வு எச்சரிக்கை

A new study warns that 39 of the world’s 100 largest cities, including Beijing, Delhi, New York and Los Angeles, are facing severe water stress due to climate change, poor water management and rapid urbanisation.

பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள் ‘அதிக ஆபத்து’ பட்டியலில் - புதிய ஆய்வு எச்சரிக்கை

பீஜிங், டெல்லி, நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்கள் “அதிக ஆபத்து” பட்டியலில் காணப்படுவதாகவும், உலகின் 100 மிகப் பெரிய நகரங்களில் பல கடுமையான நீர் நெருக்கடி (Water Stress) கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் 39 நகரங்கள் மிகவும் அதிக நீர் நெருக்கடி நிலவும் பகுதிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் நெருக்கடி என்பது, குடிநீர் விநியோகம் மற்றும் தொழில்துறைகளுக்காக பயன்படுத்தப்படும் நீரின் அளவு மற்றும் அங்கு கிடைக்கக்கூடிய நீர் வளங்களை மீறிச் செல்லும் நிலையை குறிக்கிறது. காலநிலை மாற்றம், மோசமான நீர் மேலாண்மை மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை இதற்கான பிரதான காரணங்களாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Watershed Investigations மற்றும் The Guardian இணைந்து மேற்கொண்ட வரைபட ஆய்வின் படி, பீஜிங், டெல்லி, நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ், ரியோ டி ஜெனீரோ போன்ற நகரங்கள் மிகக் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதேபோல் லண்டன், பாங்கொக், ஜகார்த்தா ஆகிய நகரங்கள் “அதிக நீர் நெருக்கடி” கொண்ட நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

University College London (UCL) விஞ்ஞானிகள் நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததில், கடந்த 20 ஆண்டுகளில் சில நகரங்கள் வறண்டு வருவதாகவும், சில நகரங்களில் அதிக ஈரப்பதம் உருவாகி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சென்னை, தெஹ்ரான், செங்சோ போன்ற நகரங்களில் கடும் வறட்சிப் போக்கு காணப்படுகின்றது. டோக்கியோ, லாகோஸ், கம்பாலா ஆகிய நகரங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது.

நீண்டகால வறட்சி நிலவும் பகுதிகளில் அமைந்துள்ள பெருநகரங்களில் சுமார் 1.1 பில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கு மாறாக, ஈரப்பதம் அதிகரிக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் தொகை சுமார் 96 மில்லியன் மட்டுமே உள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரான், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக வறட்சியை எதிர்கொண்டு வருவதுடன், குடிமக்களுக்கு நீர் வழங்க முடியாத “டே ஸீரோ” நிலைக்கு நெருங்கி வருவதாக எச்சரிக்கப்படுகிறது. வறட்சி தொடர்ந்தால் நகரம் முழுமையாக வெறுமையாகலாம் என ஈரான் அரசு கடந்த ஆண்டு எச்சரித்திருந்தது. இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மற்றும் இந்தியாவின் சென்னை நகரங்களும் இதே அபாய நிலையை எதிர்கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், உலகம் தற்போது ‘நீர் திவாலாக்க நிலை’ (Water Bankruptcy) யில் நுழைந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
ஐ.நா. நீர்சூழல் நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் கவெ மடானி, “காலநிலை மாற்றம் மட்டுமல்ல; மோசமான நீர் முகாமைத்துவமே இந்த நெருக்கடியின் பிரதான காரணம்”
என்று தெரிவித்துள்ளார்.

உலக வங்கி குழுவின் தரவுகளின்படி, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் நீர் வளம் ஆண்டுக்கு 324 பில்லியன் கன மீற்றர் வீதம் குறைந்து வருகிறது. இது இந்தோனேசியாவின் மக்கள் தொகைக்கு தேவையான நீருக்கு சமமான அளவு எனக் குறிப்பிடப்படுகிறது.

2055 ஆம் ஆண்டுக்குள், இங்கிலாந்தில் பொதுக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தினமும் கூடுதலாக 5 பில்லியன் லீற்றர் நீர் தேவைப்படும் என அந்நாட்டு சுற்றுச்சூழல் முகாமை எச்சரித்துள்ளது.

பேராசிரியர் முகம்மது ஷம்சுத்துஹா, “நிலத்தடி நீர் ஒரு மறைந்துள்ள, காலநிலை மாற்றத்துக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட வளம். ஆனால் சரியான கண்காணிப்பு இல்லாமல் அதை பயன்படுத்துவது ஆபத்தானது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.