இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் ‘RESPIRE 2026’ மாநாட்டில் லினா மேனுஃபாக்சரிங் Diamond அனுசரணை

Lina Manufacturing, part of Sunshine Holdings PLC, participated as a Diamond Sponsor at the Sri Lanka College of Pulmonologists’ RESPIRE 2026 conference in Colombo, supporting advancements in respiratory healthcare.

இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் ‘RESPIRE 2026’ மாநாட்டில் லினா மேனுஃபாக்சரிங் Diamond அனுசரணை

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி.இன் மருந்து உற்பத்தி பிரிவான லினா மேனுஃபாக்சரிங், கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரியின் வருடாந்த கல்வி அமர்வான 'RESPIRE 2026' இல் Diamond அனுசரணையாளராக பங்கேற்றது.

“சுவாசப் பராமரிப்பில் மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் சமநிலை” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, 2026 பெப்ரவரி 15ஆம் திகதியன்று மிக விமர்சையாகத் ஆரம்பமாகி, பெப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் தொடர்ந்தது. புகழ்பெற்ற வெளிநாட்டு விரிவுரையாளர்கள் மற்றும் இலங்கையின் சுவாச மருத்துவத் துறை சார்ந்த நிபுணர்கள், வர்த்தகப் பங்காளிகள் என 300-க்கும் மேற்பட்டோரின் பங்கேற்புடன் விரிவான கல்விசார் நிகழ்ச்சித் திட்டங்கள் இதன்போது இடம்பெற்றன.

சுவாச நோய்களுக்கான மருந்து உற்பத்தியில் இலங்கையின் முன்னோடி உள்நாட்டு நிறுவனமான லினா மேனுஃபாக்சரிங், இந்த மருத்துவக் கல்லூரியுடனான இக்கூட்டுப்பணியை நாட்டின் சுவாச மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஏனைய தரப்பினரிடையே சிறந்த நடைமுறைகள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதை வலுப்படுத்துவதற்குமான ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதுகிறது.

இந்த அனுசரணை குறித்து லினா மேனுஃபாக்சரிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் டி. சயந்தன் கருத்துத் தெரிவிக்கையில்: 

நிபுணத்துவம், சான்றுகள் மற்றும் நடைமுறை கற்றல் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், இலங்கையில் சுவாச மருத்துவத் துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதில் RESPIRE தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றது. சுவாசப் பராமரிப்பில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஓர் உள்நாட்டு உற்பத்தியாளர் என்ற வகையில், இந்த முன்முயற்சியையும், மருத்துவத் திறனை வலுப்படுத்துவதற்கும் நோயாளிகளின் சிகிச்சை முடிவுகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை நுரையீரல் நிபுணர்கள் கல்லூரி மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளையும் ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என தெரிவித்தார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஆக்கிரமிப்பற்ற காற்றோட்ட முறை (Non-invasive ventilation), மார்பு சிகிச்சை நடைமுறைகள் (Thoracic procedures), நுரையீரல் தொற்றுகள், நித்திரை மருத்துவ முறை (Sleep medicine) மற்றும் அவசர சிகிச்சை (Critical care) போன்ற முக்கிய தலைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு செயலமர்வுகள், சிறப்பு அதிதிகளின் விரிவுரைகள், குழு விவாதங்கள் மற்றும் நேரடி பயிற்சி அமர்வுகள் இடம்பெற்றன. மேலும், இந்நிகழ்வு பல்வேறு தரப்பினரிடையே தொடர்புகளை ஏற்படுத்தியதுடன், சுவாச மருத்துவத் துறையில் மேலதிக முன்னேற்றங்களை நோக்கிய எல்லை கடந்த கூட்டுப்பணிகளுக்கும் வழிவகுத்தமை குறிப்பிடத்தக்கது.