விவசாய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே இலங்கை விஜயம்
அமெரிக்காவின் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே, அவரது மனைவியும் முதல் பெண்மணியுமான சூசன் ஜியன்ஃபோர்ட்டே மற்றும் மொன்டானா மாநில பிரதிநிதிகள் குழுவினருடன் ஒக்டோபர் 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், மொன்டானா தேசிய காவல்படையின் State Partnership Program ஊடாக இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். குறிப்பாக கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் உலர் பட்டாணி உள்ளிட்ட மொன்டானாவில் உற்பத்தி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கான வர்த்தக வாய்ப்புகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம், கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் இராணுவத் தொழில்முறை கல்வி தொடர்பான ஒத்துழைப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
மொன்டானா தேசிய காவற் படையின் State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பாதுகாப்பு ஒத்துழைப்பினை ஆழப்படுத்துவதற்காகவும், அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காகவும், மொன்டானா மாநில தூதுக்குழுவொன்றுடனும், முதற்பெண்மணி சூசன் ஜியன்ஃபோர்ட்டே உடனும் மொன்டானா மாநில ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே நாளை 9ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மொன்டானா மாநிலமானது, பரந்து விரிந்த நிலப்பரப்புகள், வளமான விவசாய நிலங்கள் மற்றும் ரொக்கி மலைச் சிகரங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.
கொண்டைக்கடலை, பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த பட்டாணி போன்ற பயறு வகைகளின் முன்னணி அமெரிக்க உற்பத்தியாளராக மொன்டானா மாநிலம் விளங்குகிறது.
மொன்டானாவில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கான புதிய சந்தைகளை ஆராய்வதற்காகவும், அமெரிக்க விவசாயிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காகவும், இலங்கை வணிகங்களுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்துவதற்காகவும், இலங்கைக்கு பருப்பு வகைகளை இறக்குமதி செய்பவர்களையும், வர்த்தகர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு இத்தூதுக்குழு திட்டமிட்டுள்ளது.
“மொன்டானாவின் பண்ணைகளிலிருந்து இலங்கையின் இந்து சமுத்திர கரைகள் வரை இப்பங்காண்மையானது, பகிரப்பட்ட பாதுகாப்புடன், பொருளாதார வாய்ப்பினை இணைக்கிறது.” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
“அமெரிக்க விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் வருகை தரும் ஆளுநர் ஜியன்ஃபோர்ட்டே அவர்களையும், முதற்பெண்மணி சூசன் ஜியன்ஃபோர்ட்டே அவர்களையும், மற்றும் மொன்டானா மாநில தூதுக்குழுவையும் வரவேற்பதற்கு நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கும் மொன்டானா மாநிலத்திற்குமிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருக்கும் State Partnership Program நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பாதுகாப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக, மொன்டானா மாநிலத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரியும், மொன்டானா தேசிய காவற் படையின் கட்டளைத் தளபதியுமான பிரிகேடியர் ஜெனரல் ட்ரென்டன் கிப்ஸனும் ஆளுநரின் தூதுக்குழுவுடன் வருகை தருவார்.
பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு நடவடிக்கைகள், கடல்சார் விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்காகவும், அவற்றை விரிவுபடுத்துவதற்காகவும், 2025ஆம் ஆண்டில் மொன்டானா தேசிய காவற் படையும் இலங்கையின் பாதுகாப்பமைச்சும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
இப்பங்காண்மையானது, மொன்டானாவிற்கும், இலங்கைக்குமிடையே நீடித்த உறவுகளைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை, கடல்சார் பாதுகாப்பு, மற்றும் இராணுவ அதிகாரிகளின் தொழில்முறைத் திறன்கள் ஆகியவற்றையும் பலப்படுத்துகிறது. மொன்டானா மாநில ஆளுநரின் இவ்விஜயமானது, அவ்வொத்துழைப்பை ஆழப்படுத்துவதுடன், விவசாய வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்.
கிரெக் ஜியன்ஃபோர்ட்டே அமெரிக்க மொன்டானா மாநில ஆளுநர்
உயர்நிலைப் பாடசாலையில் படிக்கும்போதே தனது முதலாவது வணிக முயற்சியை ஆரம்பித்த ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலேயே தனது பணிவாழ்க்கையை செலவிட்டார். 1997ஆம் ஆண்டில், கிரெக் மற்றும் சூசன் ஜியன்ஃபோர்ட்டே ஆகிய இருவரும் போஸ்மனில் உள்ள தமது இல்லத்தில் ரைட்நவ் டெக்னோலொஜிஸ் எனும் நிறுவனத்தை நிறுவி, மொன்டானாவில் அதிக ஊதியம் வழங்கும் 500இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அந்த நகரின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக அதை வளர்த்தெடுத்தனர்.
தனியார் துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மொன்டானா ஆளுநர் தேர்தல் வரலாற்றிலேயே எந்தவொரு வேட்பாளரும் பெற்றிராத அளவிலான அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, 1920ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல் முறையாக ஆளுநராகப் பதவியேற்பவர் பெற்ற மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்று மொன்டானாவின் 25ஆவது ஆளுநராக கிரெக் ஜியன்ஃபோர்ட்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் ஜியன்ஃபோர்ட்டே, 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் ஆளுநராகப் பதவியேற்ற குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முதலாவது நபராவார்.
ஒரு வர்த்தகராகவும், தொழில்முயற்சியாளராகவும் ஆளுநர் ஜியன்ஃபோர்ட்டே பெற்றுக்கொண்ட அனுபவமானது, மொன்டானா மக்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நல்ல ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மொன்டானாவின் வாழ்க்கை முறையைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அவரது கவனத்தை வழிநடத்துகிறது.
ஆளுநர் ஜியன்ஃபோர்ட்டே வரலாற்றுச் சிறப்புமிக்க வரிக்குறைப்புகளை வழங்கியுள்ளார்; மொன்டானாவை கடன் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளார்; கல்வித்துறைக்கு சாதனை அளவிலான நிதியளிப்பினை வழங்கியுள்ளார்; ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளார்; சட்ட அமுலாக்கத் துறைக்கான நிதியை அதிகரித்துள்ளார்; மேலும் 1,00,000 ஏக்கருக்கும் அதிகமான அரச நிலங்களை பொதுமக்கள் அணுகுவதற்கான (பயன்படுத்துவதற்கான) வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளார்.
ஆளுநர் ஜியன்ஃபோர்ட்டே அவர்களின் தலைமையின் கீழ், முன்னெப்போதையும் விட அதிகமான மொன்டானா மக்கள் தொழில் செய்கின்றனர்; வேலைவாய்ப்பின்மை சாதனை அளவிற்குக் குறைந்துள்ளது; மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உருவாக்கத்தில் மொன்டானா புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.
கிரெக் மற்றும் சூசன் ஜியன்ஃபோர்ட்டே ஆகியோர் 1988 ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர். மொன்டானாவின் அரச நிலங்களில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல், படகுச் சவாரி, மலையேற்றம், பனிச்சறுக்கு மற்றும் நீண்ட தூர நடைப்பயணம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட அவர்கள், தமது நான்கு பிள்ளைகளையும் போஸ்மனில் வளர்த்தனர்.
அமெரிக்க மொன்டானா மாநிலத்தின் ஆளுநரான கிரெக் ஜியன்ஃபோர்ட்டே
ஆளுநர் கிரெக் ஜியன்ஃபோர்ட்டே மற்றும் முதற் பெண்மணி சூசன் ஜியன்ஃபோர்ட்டே
editor