பால்புதுமையினர் தொடர்பான ஊடக அறிக்கையிடலில் பொறுப்புணர்வு அவசியம் – இக்விட்டி நிறுவனம்

Équité Sri Lanka has stressed the importance of ethical and responsible media reporting on LGBTQI+ issues to prevent discrimination and hate. A media guideline was launched in Colombo to promote accurate, sensitive, and rights-based journalism.

பால்புதுமையினர் தொடர்பான ஊடக அறிக்கையிடலில் பொறுப்புணர்வு அவசியம் – இக்விட்டி நிறுவனம்

இலங்கையில் வாழும் தன்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு, திருநர் மற்றும் இடைலிங்கம் உள்ளிட்ட பல்வேறு பால்நிலை அடையாளங்களைக் கொண்ட பால்புதுமையினரின் (LGBTQI+) மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக முன்னின்று செயற்பட்டு வரும் இலங்கையின் முதன்மையான அமைப்பான இக்விட்டி (Équité) நிறுவனம், LGBTQI+ சமூகம் தொடர்பான ஊடக அறிக்கையிடலில் ஊடக தர்மத்தைப் பேண வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

LGBTQI+ சமூகத்தினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும், பொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வு உருவாகாத வகையிலும் பொறுப்புடன் செய்திகளை வெளியிடுவதற்கான முறையான வழிகாட்டி கையேடு ஒன்றை ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகப் பிரதிநிதிகளுக்கும் வழங்கும் நிகழ்வு, இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த காலங்களில் இலங்கையின் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் LGBTQI+ சமூகம் சித்தரிக்கப்பட்ட விதங்களை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதான உரையை களனிப் பல்கலைக்கழகத்தின் வெகுசன தொடர்பாடல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி மனோஜ் ஜினதாச நிகழ்த்தினார். ஊடக அறிக்கையிடல் கொள்கைகள் குறித்த விசேட உரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் அதஹுதஹெட்டி வழங்கினார்.

LGBTQI+ சமூகம் இலங்கையில் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு மக்கள் குழுவாகும். ஆய்வுகளின் அடிப்படையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 6% முதல் 8% வரையிலானோர் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனினும், சரியான புரிதல் இல்லாமை, தவறான மனப்பாங்குகள், அவர்களுக்கு எதிரான காலாவதியான சட்டங்கள் மற்றும் ஊடக அறிக்கையிடலில் ஏற்படும் தவறுகள் காரணமாக, அவர்கள் பொதுச் சமூகத்தில் பாரபட்சத்திற்கும் புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அரசியல், மத மற்றும் சித்தாந்த அடிப்படைகளில் LGBTQI+ சமூகத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில தனிநபர்களின் தவறான அல்லது கவனக்குறைவான செயல்களுக்காக ஒட்டுமொத்த LGBTQI+ சமூகமும் குற்றஞ்சாட்டப்படுவது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.

இலங்கையில் வாழும் LGBTQI+ சமூகத்தினர் கோருவது, அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே அடிப்படை உரிமைகளையே ஆகும். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலாவதியான சட்டங்களைத் திருத்தி, தத்தமது பால்நிலை அடையாளங்களுக்கு ஏற்ப கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறே அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், அரசியல் அல்லது மத நோக்கங்களுக்காக ஒருவருக்கொருவர் சேறு பூசிக் கொள்ளும் செயல்களில் LGBTQI+ சமூகத்தை பயன்படுத்த வேண்டாம் என அனைத்துத் தரப்பினரிடமும் இக்விட்டி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய குறுகிய நோக்கங்களுக்காக ஊடகங்களை பயன்படுத்தாமல், துணிச்சலுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.