இந்தியாவில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

A 24-member delegation of Sri Lankan parliamentary officials completed a week-long capacity-building programme at India's Parliamentary Research and Training Institute for Democracies (PRIDE), aimed at enhancing parliamentary administration, legislative procedures, and institutional cooperation.

இந்தியாவில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

இலங்கை பாராளுமன்றத்தின் 24 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று, இந்தியாவின் Parliamentary Research and Training Institute for Democracies (PRIDE) நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை 13 முதல் 17 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.

இந்தக் குழுவுக்கு இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹேரத் முதியன்சலாகே ஹன்ச ஹேமமாலக சமீர அபேரத்ன தலைமை தாங்கினார்.

இந்த ஒரு வார கால பயிற்சித் திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய பாராளுமன்றத்தின் நிர்வாக அமைப்பு, சட்டமன்ற நடைமுறைகள், பாராளுமன்றக் குழு முறைமை மற்றும் நிறுவன கட்டமைப்புகள் தொடர்பாக இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நடைமுறை அனுபவத்தையும் அறிவையும் வழங்குவதாகும்.

பயிற்சித் திட்டம் PRIDE நிறுவனத்தின் வரவேற்பு மற்றும் அறிமுக அமர்வுடன் ஆரம்பமானது. இதன்போது இந்திய பாராளுமன்ற செயலகத்தின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், உறுப்பினர்களுக்கான நலன்புரிச் சேவைகள், உறுப்பினர் சேவைப் பிரிவு, உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரிவுகள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கிய பிரிவுகளின் பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள், அவை நடைமுறைகள், மரியாதை மற்றும் நெறிமுறைகள், இராஜதந்திர வழிகாட்டுதல்கள், நிதிக்குழுக்கள், கூட்டுக் குழுக்கள், தெரிவுக்குழுக்கள் மற்றும் துறை சார்ந்த நிரந்தரக் குழுக்கள் (Departmentally Related Standing Committees – DRSCs) உள்ளிட்ட குழு முறைமைகள் தொடர்பாகவும் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் மற்றொரு பகுதியாக, பாராளுமன்ற செயலகத்தின் வருடாந்திர வரவு-செலவுத் திட்டம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, ஒருங்கிணைந்த நிதிப் பிரிவு (Integrated Finance Unit – IFU) மற்றும் Budget and Parliament (B&P) பிரிவுகளின் பொறுப்புகள் என்ன என்பதையும் அதிகாரிகள் அறிந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்திய பாராளுமன்ற வளாகத்திற்கும் அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபா அவை அரங்குகள், பாராளுமன்ற கலைக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு இந்திய ஜனநாயக அமைப்பின் செயற்பாடுகளை நேரடியாக அறிந்துகொண்டனர்.

கலாசார அனுபவத்தின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் இலங்கை அதிகாரிகள் விஜயம் செய்தனர்.

இந்தப் பயிற்சி விஜயம், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நிறுவன ரீதியான அனுபவப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.