TikTok மூலம் பூனைகள் கைவிடப்படுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் CocoBunny Family
Sri Lanka's viral TikTok creators CocoBunny Family are using social media to raise awareness about cat abandonment, rescue animals, and responsible pet ownership while building a compassionate online community.
உங்களிடம் ஒரு செல்லப் பூனை இருந்தால், வீட்டில் உண்மையான பாஸ் (boss) யார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நள்ளிரவில் ஓடிப்பிடித்து விளையாடுவது, அதிகாலையிலேயே அசுத்தமான படுக்கைப் பெட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, அவை தங்களின் ராஜ்ஜியத்தை நம் வீடுகளில் நடத்துகின்றன. இத்தகைய குட்டிப் பூனைகளின் குறும்புத்தனங்களுக்கும் கோபங்களுக்கும் ஈடுகொடுத்து, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவற்றைச் சுற்றியே அமைத்துக் கொள்கிறோம். ஏனெனில், அவை வெறும் செல்லப்பிராணிகள் அல்ல் நம் வீட்டுப் பிள்ளைகள்.
இப்படிப்பட்ட பூனைகளின் மீதான எல்லையற்ற அன்பின் காரணமாக, இன்று இலங்கை முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு TikTok பக்கத்துடன் தங்களை உணர்வுபூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். அதுதான், ஆதித்ய உபுல் இந்திரஜித் மற்றும் ருவனி ரத்நாயக்க ஆகிய கணவன்-மனைவி ஜோடியால் அன்போடு நடத்தப்படும் "கோகோபன்னி பெமிலி" (CocoBunny Family) பக்கமாகும்.
பூனைகளின் ஓயாத குரலை வைத்து, அவற்றை செல்லமாக "புருபுருவோ" (Purupuruwo) என்று அழைக்கும் இத்தம்பதியினர், இன்று இலங்கை TikTok தளத்தில் மிகவும் பிரபலமானவர்களாக மாறியுள்ளனர்.
இரு ஆதரவற்ற பூனைகளால் மாறிய வாழ்க்கை
இன்று வைரலாகும் வீடியோக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கருத்துக்களுக்குப் பின்னால், ஒரு நெகிழ்ச்சியான கதை ஒளிந்துள்ளது. பாதுகாப்பையும் பாசத்தையும் தேடி அலைந்த இரு தெருப்பூனைகளே இந்த மாற்றத்திற்குக் காரணம். முதலில் பன்னி (Bunny), அதன் பிறகு கோகோ (Coco) என இரண்டு பூனைகள் இவர்களது வாழ்வில் நுழைந்தன. அவற்றுக்கு உணவளிப்பது, அவற்றுடன் பயணம் செய்வது, தூங்கும் போது கொஞ்சுவது என இவர்களது அன்றாட வாழ்க்கை முற்றிலும் பூனைகளுடனான அழகான தருணங்களாக மாறின.
ஆரம்பத்தில் இவர்களது குறும்புத்தனமான மற்றும் வேடிக்கையான தருணங்களை ஆவணப்படுத்தவே TikTok இல் வீடியோக்களைப் பதிவிட்டனர். ஆனால், காலப்போக்கில் அது ஒரு ஆழமான பணியாக உருவெடுத்தது. தெருவில் கைவிடப்பட்ட பூனைகளுக்கும் மற்ற விலங்குகளைப் போலவே சமமான அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும் தேவை என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இவர்களின் முதன்மை நோக்கமாக மாறியது.
பொழுதுபோக்கிலிருந்து விழிப்புணர்வு நோக்கி
இவர்களது ரசிகர் பட்டாளம் வளர்ந்தபோது, வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி மக்கள் தங்களிடம் பூனைகளைப் பராமரிப்பது குறித்துப் பல உதவிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்ப்பதை ஆதித்யாவும் ருவனியும் கவனித்தனர். “பூனைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும், நோய்களுக்கான மருந்துகள், அவற்றின் நடத்தை மற்றும் உணர்வுபூர்வமான கவனிப்பு குறித்து பலருக்கும் சரியான புரிதல் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.” என இத்தம்பதியினர் விளக்குகிறார்கள்.
பூனைகளை எவ்வாறு சரியாக வளர்ப்பது அல்லது அதில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாததாலேயே, இலங்கையில் பல பூனைகள் வீதிகளில் கைவிடப்படுகின்றன என்ற வருத்தமான உண்மையை அவர்கள் புரிந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே CocoBunny Family பக்கம் ஒரு கல்வி மற்றும் வழிகாட்டுதல் தளமாக மாற்றப்பட்டது.
TikTok மூலம் உருவான ஒரு பாசப் பிணைப்பு
இலங்கையில் மிக வேகமாக வளர்ந்து வரும் TikTok தளம், இவர்களின் செய்தியைப் பலரிடமும் கொண்டு சேர்க்கும் ஒரு பெரிய பாலமாக அமைந்தது. #CocoBunnyFamily> #PuruPuruwo> #CatTok மற்றும் #RescueCats போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் இவர்களது வீடியோக்கள் வைரலாகின.
இவர்களின் வீடியோக்களுக்கு கீழே வரும் கருத்துக்கள் வெறும் 'இமோஜிகளாக' மட்டும் இருப்பதில்லை. மாறாக, மக்கள் தங்களின் பூனைகள் பற்றிய கதைகள், செல்லப்பிராணிகளின் இழப்புகள் மற்றும் அவை தரும் மகிழ்ச்சி என அனைத்தையும் ஒரு குடும்பம் போலப் பகிர்ந்து கொள்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான செய்திகள் வருவதால் சில நேரங்களில் இவர்களால் அனைவருக்கும் பதிலளிக்க முடிவதில்லை. இருப்பினும், TikTok மூலம் கிடைத்துள்ள மனிதநேயமிக்க இந்த உணர்வுபூர்வமான பிணைப்பு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அன்பான எதிர்காலத்தை நோக்கிய பயணம்
ஆதித்ய மற்றும் ருவனி ஜோடியைப் பொறுத்தவரை, இந்த பக்கத்தின் வெற்றி என்பது வெறும் Views அல்லது பின்தொடர்பவர்களின் (Followers) எண்ணிக்கையில் இல்லை. மாறாக, அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திலேயே உள்ளது. விலங்குகள், குறிப்பாக தெருப்பூனைகள் மீதான மக்களின் பார்வையை மாற்றுவதே இவர்களின் லட்சியம்.
“எங்கள் வீடியோக்களைப் பார்த்துவிட்டு யாராவது ஒருவர் தனது பூனையை இன்னும் அன்பாகவும் பொறுப்பாகவும் வளர்க்கக் கற்றுக்கொண்டால், அதுவே நாங்கள் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.” என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
செல்லப்பிராணிகளை நேசிக்கத் தெரிந்த ஒரு மனிதனால், சக மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் தன் சுயத்தையும் நேசிக்க முடியும்' என்ற உன்னதமான தத்துவத்தோடு இவர்களது பயணம் தொடர்கிறது. வீதிகளில் கைவிடப்படும் பூனைகளுக்காக இன்னும் பெரிய பல திட்டங்களை இத்தம்பதியினர் மனதில் வைத்துள்ளனர். Coco மற்றும் Bunny ஆகிய இரு குட்டிப் பூனைகளும் நிரூபித்தது போல, சிறிய பாதங்கள் மனித இதயங்களில் மிகப்பெரிய ஆழமான சுவடுகளை பதிக்க முடியும் என்பது மட்டும் உண்மை!
editor