இலங்கையின் மீன்பிடித் துறையில் மீண்டெழுதிறனை கட்டியெழுப்ப புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் அறிமுகம்

இலங்கையின் மீன்பிடித் துறையில் மீண்டெழுதிறனை கட்டியெழுப்ப புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் அறிமுகம்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனமானது (FAO), நோர்வே அரசாங்கத்தின் நிதி உதவியுடன், மேம்பட்ட குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளைச் சேமிக்கும் குமிழ் வில் (பல்பஸ்பவ்/ bulbous bow) அமைப்பு ஆகியவற்றை கொண்ட பலநாள் தங்கியிருந்து மீன் பிடிக்கக்கூடிய படகினை கையளித்தமையின் மூலமாக இலங்கையின் மீன்பிடித்துறையில் மீண்டெழுதிறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

இந்த முன்முயற்சியானது மீன்பிடி செயற்பாடுகளுக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதற்கும், செயற்படுத்தல் செலவீனங்களைக் குறைப்பதற்கும், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்குமான மீன்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதை ஊக்குவிக்கிறது.

மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புகள் மூலம் மீண்டெழுதிறனை மேம்படுத்துதல்

ஆழ்கடல் மீன்பிடிக்கு அத்தியாவசியமான இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள், குறிப்பாக “டுனா” மீன் ஏற்றுமதித் தொழிலில் நீண்ட பயணங்களின்போது மீன்களைப் பாதுகாக்க பெரும்பாலும் ஐஸ் கட்டிகளையே நம்பியுள்ளன. இருப்பினும், இந்த நடைமுறை அடிக்கடி தரத்தை சமரசம் செய்வதுடன், இது மீன்பிடி செயற்பாடுகளுக்கு பிந்தைய இழப்புகளுக்கு வழிவகுக்கிறது.

2022 - 2023இல் FAOவினால் நடத்தப்பட்ட மீன் இழப்பு மற்றும் வீண்விரைய (FLW) மதிப்பீட்டில் இலங்கையின் பல நாள் மீன்பிடியிலிருந்து கிடைக்கும் மீன்களில் சராசரியாக 41.4% தர இழப்பை கண்டறிந்தது.

இந்த சவாலை எதிர்கொள்ள FAOவால் புதிதாக கட்டப்பட்ட பலநாள் தங்கியிருந்து மீன் பிடிக்கக்கூடிய மீன்பிடிப் படகில் பயணம் முழுவதும் மீன்களை உகந்த வெப்பநிலையில் வைக்கக்கூடிய ஒரு மேம்பட்ட குளிரூட்டும் அமைப்பை நிறுவியுள்ளது. 

இந்த தொழில்நுட்பம் மீன்பிடி நடவடிக்கைகளின் மீண்டெழுதிறனை பலப்படுத்துவதுடன், கழிவுகள் மற்றும் மீன்கள் பழுதடைவதைக் குறைக்கும். அதுமட்டுமன்றி, உயர்தரமான மீன்கள் சந்தைக்கு வருவதை உறுதி செய்கிறது.
எரிபொருளைச் சேமிக்கும் குமிழ் வில் (பல்பஸ்பவ்/ bulbous bow) அமைப்பு தொழில்நுட்பத்துடன் வினைத்திறனை அதிகரிக்கும்

பலநாட்கள் தங்கியிருக்கும் மீன்பிடிப் படகுகள் ஒரு பயணத்துக்கு 8,000 முதல் 11,000 லீற்றர் டீசலை செலவிடுவதால் ஒரு பயணத்துக்கு  3 முதல் 4 மில்லியன் இலங்கை ரூபாய்கள் வரை செலவாகிறது. இந்த சுமையை குறைப்பதற்காக, FAO, படகுகளில் குமிழ் வில் (பல்பஸ்பவ்/ bulbous bow) அமைப்பு தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியது. இந்த கண்டுபிடிப்பானது அலைகளின் எதிர்ப்பைக் குறைப்பதுடன், எரிபொருள் நுகர்வில்13% குறைவினை வழங்குகிறது.

இந்த கண்டுபிடிப்பு குளிரூட்டும் அமைப்புக்கு தேவைப்படும் மேலதிக எரிபொருளை ஈடுகட்ட உதவுவது மட்டுமல்லாமல் படகு உரிமையாளர்களுக்கு நீண்ட கால பொருளாதார நன்மைகளையும் தருகிறது. 

குமிழ் வில் (பல்பஸ்பவ்/ bulbous bow) அமைப்பினை நிறுவுவதற்கான செலவான அண்ணளவாக ஒரு மில்லியன் இலங்கை ரூபாய் FAOஇன் தொழில்நுட்ப ஆதரவுடன் படகு உரிமையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இது நிலைத்தன்மையான நடைமுறைகளை கடைப்பிடிப்பதில் தனியார் துறையின் வகிபாகத்தை எடுத்துக்காட்டுகிறது.
செயற்கை நுண்ணறிவினால் (AI)வழிநடத்தப்படும் தர மதிப்பீட்டுக் கருவிகள் மூலமாக மீனவர்களை மேம்படுத்துதல்

பிடிபட்ட மீன்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதுதான் மீனவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகும். இடைத்தரகர்கள் சிறந்த அறிவுடன் இடைவெளிகளை அடிக்கடி பயன்படுத்திக்கொள்வதனால், மீனவர்களுக்கான இலாபம் குறைவடைகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்கு FAOஆனது செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் தொலைபேசி செயலியை உருவாக்கி, மஞ்சள் “டுனா” மீன் ஏற்றுமதி தரநிலையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது மீன்களின் தரத்தை நிகழ்நேரத்தில் மதிப்பிட உதவுகிறது.

இந்த செயலியானது ஓர் இலகுவான புகைப்பட பதிவேற்றம் மூலம் உடனடி பின்னூட்டல்களை வழங்குவதுடன், மீனவர்களுக்கு சிறந்த விலை தொடர்பில் பேரம்பேசும் சக்தியையும் வழங்குகிறது. 

இந்தக் கருவி, அதிக சமச்சீர் சந்தை அணுகல் மற்றும் நியாயமான விலையை உறுதி செய்வதன் மூலம் மீனவ சமுதாயங்களின் மீண்டெழுதிறனை மேம்படுத்துகிறது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த முன்முயற்சிகள், நிலைத்தன்மையான நடைமுறைகளை  ஊக்குவித்தல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் மற்றும் மீனவ சமுதாயங்களுக்கு வலுவூட்டல் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் மீன்பிடித்துறையில் மீண்டெழுதிறனை கட்டியெழுப்ப FAOஇன் பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். 

நவீன குளிரூட்டும் அமைப்புகள், எரிபொருள்-வினைத்திறனுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின்அடிப்படையிலான கருவிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் FAO மீன்பிடித்துறையின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஆதரிக்கும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
FAO பற்றி... 

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) பட்டினியைத் தோற்கடிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை வழிநடத்துகிறது. 

இது நாடுகளுக்கு விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி நடைமுறைகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுவதுடன், அவை மிகவும் நிலைத்தன்மையாக ஆக்குவதுடன் அனைவருக்குமான உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்கிறது. 

FAO உலகின் பெரும்பான்மையான ஏழைகள் மற்றும் பசியுள்ள மக்கள் வசிக்கும் கிராமபுறங்களை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துகிறது.