9 மாதங்களில் ரூ.1.15 பில்லியன் PAT – 152% வளர்ச்சி பதிவு செய்த HNB Finance PLC
HNB Finance PLC recorded Rs. 1.15 billion in profit after tax for the nine months ended December 31, 2025, reflecting a 152% year-on-year growth driven by strong lending and deposit expansion.
2025 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், HNB Finance PLC நிறுவனம் 1.15 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்தைய இலாபத்தை (PAT) ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 152% வளர்ச்சியாகும். அந்நிறுவனம் தனது ஒன்பது மாத கால செயல்பாட்டில் ஒரு பில்லியன் ரூபாய் இலக்கை கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
வலுவான முக்கிய வருமானம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பு வளர்ச்சி காரணமாக, நிறுவனத்தின் வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 209% அதிகரித்து 1.88 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
இக்காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 35% அதிகரித்து 12.93 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, நிகர வட்டி வருமானம் 52% வளர்ச்சியடைந்து 6.03 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இது நிறுவனத்தின் முதலீட்டுத் கோப்புறை (Portfolio) முழுவதும் வருவாய் ஈட்டும் திறன் மேம்பட்டுள்ளதை பிரதிபலிக்கிறது.
இந்த ஒன்பது மாத காலப்பகுதியில், நிறுவனத்தின் சொத்துத் தளம் (Asset base) 46% வளர்ச்சியடைந்து 85.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. போட்டியாளர்களிடமிருந்து சந்தைப் பங்கைக் கைப்பற்றியதன் மூலம், மொத்த கடன் கோப்புறை (Gross loan portfolio) மார்ச் 2025 உடன் ஒப்பிடுகையில் 53% அதிகரித்து 77.2 பில்லியன் ரூபாவாக விரிவடைந்துள்ளது. அதேபோல், குத்தகை கடன் கோப்புறை (Leasing portfolio) 81% வளர்ச்சியடைந்து 48.5 பில்லியன் ரூபாவாகவும், தங்கக் கடன் (Gold loan) 52% அதிகரித்து 13.6 பில்லியன் ரூபாவாகவும் உயர்ந்துள்ளது. கடன் புத்தகத்தின் இந்த வளர்ச்சியானது பிரதானமாக வைப்புத்தொகைகள் மூலமே ஈடுசெய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், வைப்புத்தொகைகள் 45% அதிகரித்து 61.0 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளன.
இந்த செயல்திறன் குறித்து HNB Finance PLC இன் தலைவர் திரு. ராஜிவ் திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,
9 மாதங்களில் 1 பில்லியன் ரூபாய் வரிக்குப் பிந்தைய இலாபத்தை (PAT) கடந்துள்ளமையானது, நிறுவனத்தின் மூலோபாயம் மற்றும் அதன் துல்லியமான செயல்பாட்டின் வெற்றியையே பிரதிபலிக்கிறது. தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்காக நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்கள் மீது நம்பிக்கை வைத்த முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முறையான முக்கியத்துவம் வாய்ந்த வங்கிசாரா நிதி நிறுவனமாக நாம் வளர்ந்து வரும் நிலையில், எமது வாடிக்கையாளர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கும் பொறுப்பான நிதி தீர்வுகளைத் தொடர்ந்து வழங்குவோம். என தெரிவித்தார்.
HNB Finance PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமா திரு. சமிந்த பிரபாத் கூறுகையில்,
எமது பிரதான கடன் வழங்கல் மற்றும் நிதி திரட்டும் கட்டமைப்புகளில், குறிப்பாக குத்தகை கடன் (Leasing), தங்கக் கடன் மற்றும் வைப்புத்தொகைகளில் தெளிவானதொரு முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். அனைத்து பங்குதாரர்களுக்கும் நீண்டகால மதிப்பினை உருவாக்கும் நோக்கில், முறையான இடர் முகாமைத்துவ (Risk management), செயல்பாட்டு ஒழுக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எமது கவனம் தொடர்ந்து நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.
editor