சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் புறக்கணிக்கப்படும் பெண்களின் குரல்

Concerns have been raised over the Environmental Impact Assessment (EIA) for the proposed mineral sand mining project in Mannar, as activists and experts say women’s voices, livelihoods and gender impacts were largely overlooked in the assessment process.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் புறக்கணிக்கப்படும் பெண்களின் குரல்

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை, காகிதத்தில் பார்க்கும்போது மறுசீரமைப்பு, நீரியல் கண்காணிப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்வைக்கிறது. நீர்வளங்கள், தாவர வளம், விலங்கியல் மற்றும் சமூக வாழ்வியல் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், அவற்றைத் தணிக்கும் நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால மீளமைப்பு திட்டங்கள் முன்மொழியப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்த மதிப்பீட்டை உருவாக்கியதில் யாரின் அறிவும் அனுபவமும் இடம் பெற்றது? யாருடைய குரல் புறக்கணிக்கப்பட்டது?
திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றாலும், அதன் மதிப்பீட்டு செயல்முறை தற்போது பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே கேள்விக்குறியாகியுள்ளது.


பாலினக் கண்ணோட்டத்தில் EIA


மன்னாரில் நீர், உணவு மற்றும் சிறு அளவிலான விவசாய நடவடிக்கைகளில் பெண்கள் பிரதான பங்கு வகிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில், சுற்றுச்சூழல் மாற்றம் என்பது, அவர்கள் வாழ்க்கையில் நேரடியாக வேலைச்சுமை, உடல்நலம் மற்றும் வருமானத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


கிணறுகள் உப்புநீராக மாறும்போது அல்லது நிலத்தின் வளம் குறையும்போது, அது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல. நீருக்காக நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை, விளைச்சல் குறைவு, குடும்ப உணவுப் பழக்கங்களில் மாற்றம் போன்ற நடைமுறை விளைவுகளாக அது மாறுகிறது.


ஆனால் EIA ஆலோசனை செயல்முறையில் வெறும் 24 நில உரிமையாளர்களும் சில சமூக பிரதிநிதிகளும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் பெண்களுடன் தொடர்புடைய விடயங்கள்,  குறிப்பாக நிலத்தடி நீர் பயன்பாடு, காலநிலை மாற்றங்கள் மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் தொடர்பாக  முறையாக பதிவு செய்யப்படவில்லை.


1998 முதல் மன்னார் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் மன்னார் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் கே. மகாலக்ஷ்மி இதன் விளைவுகளை விளக்குகிறார்:


“கனிம மண் அகழ்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டால் குடிநீரும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். பெண்கள் பனை, தேங்காய், விவசாயம், வீட்டுத் தோட்டங்கள் போன்றவற்றிலேயே பெரும்பாலும்  சார்ந்துள்ளனர். இவை பாதிக்கப்பட்டால் குடும்பங்கள் அங்கே தங்க முடியாது.”


நில உரிமையாளரான பிரியதர்ஷினி ரொட்ரிகோ, தன் நில ஆவணங்களை காட்டிக்கொண்டு மேலும் கூறுகிறார்:


“எங்களிடம் யாரும் கேட்கவில்லை. எங்கள் கவலைகளை யாரும் பதிவு செய்யவில்லை. ஆனாலும் ஒரு நிறுவனம் வந்து எங்கள் பூர்வீக நிலத்தை தங்களுடையது என்று கூறுகிறது. சட்டரீதியான ஆவணங்கள் எம்மிடம் இருக்கும்போது எப்படி இது சாத்தியமாகும்” என்கிறார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், “உதவித்தொகை பெறும்போது அல்லது கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது மக்களிடம் கையெழுத்து வாங்கினர். பின்னர் அந்த கையெழுத்துகளை திட்டத்திற்கு ஒப்புதல் எனக் கூறினர். ஆனால் நாம் ஒப்புதல் அளிக்கவில்லை.”


மறைந்திருக்கும் சமூகச் சுமைகள்


சமூக செயற்பாட்டாளர் இ.பி.எப். ரோஜன் சுற்றுச்சூழல் பாதிப்பின் நிலையை இவ்வாறு விளக்குகிறார்:


“இந்தத் திட்டத்தினால் முதலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதன் பிறகு பெண்கள். பின்னர் குழந்தைகள். காரணம் கிராமத்திலும் வீட்டிலும் அதிக நேரம் செலவிடுவது பெண்கள்தான்.”


அவரின் கூற்றுப்படி, சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் நிலம் மற்றும் நீரின் தரத்தை அளவிடுகின்றன. ஆனால் பெண்கள் மேற்கொள்ளும் சம்பளமில்லா பராமரிப்பு பணிகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.


பாலினத் தரவின்மை


மன்னார் EIA அறிக்கை சுற்றுச்சூழல் மாதிரிகள் மற்றும் தாக்க மதிப்பீடுகளை கொண்டிருந்தாலும், பாலின அடிப்படையிலான அபாயங்கள் எவ்வாறு மதிப்பிடப்பட்டன என்பதைக் தெளிவாகக் காட்டவில்லை.


இதனால் பின்வரும் பல உண்மைகள் மறைந்துபோகின்றன:


• பாதுகாப்பான நீர் பெற அதிக நேரம் தேவைப்படுதல்
• வீட்டுத் தோட்டங்களின் உற்பத்தி குறைவு
• குடும்ப வருமான நிலைத்தன்மை பாதிப்பு
• சிறு அளவிலான மீன்பிடி வாழ்வாதார பாதிப்பு
• குடும்ப உணவில் ஊட்டச்சத்து குறைவு
• பெண்கள் மற்றும் சிறுமிகளின் வேலைச்சுமை அதிகரிப்பு
• மாசடைந்த நீரால் உடல்நல அபாயங்கள்
• இடம்பெயர்வு மற்றும் நில இழப்பு அபாயம்
 

“பெண்கள் அமைப்புகளோ அல்லது சிவில் சமூக அமைப்புகளோடு எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. மக்கள் பலருக்கும் இந்த தாக்க மதிப்பீடு பற்றியே தெரியவில்லை.” என்கிறார் மகாலக்ஷ்மி.


உள்ளூர் சுற்றுச்சூழல் கரிசனைகள் 


மன்னார் என்பது “படுகைப்பாறை இல்லாத மணல் தீவு” என்பதால், கனிய மணல் அகழ்வு நிலத்தின் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர் எடிசன் எச்சரிக்கிறார்.


“மரங்களை மீண்டும் நட்டுவிடலாம். ஆனால் ஒரு சூழலமைப்பை மீண்டும் உருவாக்க முடியாது.” என்றார் எடிசன்.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியர் பரீனா ருசைக் (Professor Fareena Ruzaik), அறிவியல் ரீதியான பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். கிடைக்கக்கூடிய அறிவியல் ஆராய்ச்சி ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன், மனித ஆரோக்கியம் உட்பட சுற்றுப்புறச் சூழல் ஆரோக்கியத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் புரிந்துகொள்ள, சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுடன் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.


கடலோர மணல் பரப்புகளில் ஆழமாக அகழ்வாராய்ச்சி செய்வது, கடல் நீர் நிலத்தடிக்குள் புகுவதை (seawater intrusion) வேகப்படுத்தும் என்று அவர் மேலும் எச்சரிக்கிறார். இந்தச் செயல்முறை நிலத்தடி நீர் அமைப்புகளை நிரந்தரமாக மாற்றக்கூடும். இது அருகிலுள்ள குடியிருப்புகளின் நீண்டகால வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


செயன்முறை குறித்த கேள்விகள்


மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மார்கஸ் குறிப்பிடுகையில், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மக்களுக்கு முன்வைக்கப்பட்டு, அவர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட வேண்டும்.” என்றார்.


சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மெலனி குணதிலக மேலும் ஒரு கட்டமைப்பு குறைபாட்டைக் குறிப்பிடுகிறார்:


“இலங்கையில் பல நேரங்களில் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனம் தான் EIA அறிக்கையை முன்னெடுப்பதற்கு ஒப்பந்தம் வழங்குகிறது. இது வெளிப்படையான நல முரணை உருவாக்குகிறது.”


அதிகாரிகளின் பதில்


கரையோர பாதுகாப்பு மற்றும் வள மேலாண்மை துறையின் மேலதிக பணிப்பாளர் பொறியாளர் லங்கா ராமநாயக்க கூறுகையில், திட்ட முன்மொழிவாளர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனுமதி வழங்கப்படுவதில்லை.
அவரின் கூற்றுப்படி, தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு ஆய்வு செய்து, 30 நாள் பொதுமக்கள் கருத்து பெறும் காலப்பகுதியும் வழங்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


எனினும், மன்னார் மக்களிடையே காற்றாலை திட்டங்கள், மீன்வள வளர்ப்பு மற்றும் மணல் அகழ்வு போன்ற பல அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக நீர்தர மாற்றம், கடற்கரை கடலரிப்பு,  மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.


சுற்றுச்சூழல் மதிப்பீட்டின் உண்மையான நோக்கம்


மன்னார் விவகாரம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: அன்றாடம் இயற்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் மக்களின் அனுபவங்களை புறக்கணித்தால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு உண்மையில் சுற்றுச்சூழல் அபாயத்தை மதிப்பிட முடியுமா?
மன்னாரில் பெண்கள் புறக்கணிக்கப்படக்கூடிய பங்குதாரர்கள் அல்ல. அவர்கள் நீர், உணவு மற்றும் குடும்ப வாழ்வாதாரத்தை நிர்வகிக்கும் முக்கிய சுற்றுச்சூழல் பங்குதாரர்கள்.


அவர்களின் அனுபவமும் அறிவும் மதிப்பீட்டில் இடம்பெறாதபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு நிர்வாக நடைமுறையாக மட்டுமே மாறும் அபாயம் உள்ளது.


சுற்றுச்சூழல் மதிப்பீட்டின் நம்பகத்தன்மை நிலத்தை அளவிடுவதில் மட்டும் இல்லை — அந்த நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை அறிதலிலேயே இருக்கிறது. தாக்க மதிப்பிட்டு அறிக்கையை மீள தயாரிக்கும் தற்போதைய கலந்துரையாடல்களில் இவை உள்வாங்கப்படுவது கட்டாயம்.


கலாவர்ஷ்னி கனகரட்ணம்
இந்த ஆக்கம் Earth Journalism Networkஇன் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டது.