ஜப்பான் – இலங்கை முதலீட்டு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை
ஜப்பான் – இலங்கை வர்த்தகச் சூழல் குழுவின் 5ஆவது கூட்டம் நடைபெற்றதுடன், ஏற்றுமதி நோக்கிய தொழில்துறை வழித்தட அபிவிருத்திக்கான முதலாவது கூட்டு பணிக்குழுவும் ஆரம்பிக்கப்பட்டது.
ஜப்பான் – இலங்கை வர்த்தகச் சூழல் தொடர்பான குழுவின் 5 ஆவது கூட்டம் கடந்த 25 ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (JETRO), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA), ஜப்பான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (JCCI), இலங்கையில் இயங்கும் ஜப்பானிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் தற்போது தொழில் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், இலங்கையின் வர்த்தகச் சூழலை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதன் மூலம் இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பையும் மேலும் அதிகரிப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 25ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தில் ஏற்றுமதி நோக்கிய கைத்தொழில் வழித்தட அபிவிருத்தி தொடர்பான இலங்கை – ஜப்பான் கூட்டு செயற்குழுவின் (JWG) முதலாவது கூட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜப்பான் தூதரகம், ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சு (METI), ஜப்பான் வெளிவிவகார அமைச்சு (MOFA), JETRO, JICA மற்றும் JCCI ஆகியவற்றின் பிரதிநிதிகளும், இலங்கை வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் நடைபெற்ற அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார கொள்கை கலந்துரையாடலில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த கூட்டு செயற்குழு நிறுவப்பட்டுள்ளது.
“ஏற்றுமதி நோக்கிய கைத்தொழில் வழித்தடத்தை உருவாக்குவதற்கான கருத்தியல் வரைபடத்தை” (Conceptual Roadmap on Building an Export-Oriented Industrial Corridor) நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் பணியாளர் மட்டத்திலான கட்டமைப்பாக இந்தக் குழு செயற்படவுள்ளது.
முதலாவது கூட்டத்தில், குறித்த வரைபடத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வர்த்தகச் சூழல் தொடர்பான விடயங்கள், முன்னுரிமைப் பகுதிகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் மூலம் இலங்கை – ஜப்பான் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கையில் ஏற்றுமதி நோக்கிய கைத்தொழில் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
editor