சுவிற்சர்லாந்து – இலங்கை உறவின் மூன்று முக்கிய மைல்கற்களை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருநாள் நிகழ்வு

சுவிற்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, சுவிட்சர்லாந்து தூதரகம் 2026 அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இரு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் அபிவிருத்தி ஒத்துழைப்பு, சமாதானம், மனித உரிமைகள் மற்றும் மனிதநேய உதவிகளில் சுவிற்சர்லாந்தின் நீண்டகால பங்களிப்பு நினைவுகூரப்படுவதுடன், ஆவணப்படத் திரையிடல், “70 ஆண்டுகள் | 70 முகங்கள்” புகைப்படக் கண்காட்சி மற்றும் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி, புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு, தேசிய ஒருமைப்பாடு குறித்த நிபுணர் குழு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

சுவிற்சர்லாந்து – இலங்கை உறவின் மூன்று முக்கிய மைல்கற்களை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருநாள் நிகழ்வு

சுவிற்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சுவிற்சர்லாந்து தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இருநாள் நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது மூன்று முக்கிய மைல்கற்கள் நினைவுகூரப்படவுள்ளன.

* சுவிற்சர்லாந்து – இலங்கை நட்புறவின் 70 ஆண்டுகள்
* சமாதானம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஈடுபாட்டின் 25 ஆண்டுகள்
* சுவிஸ் அபிவிருத்தி ஒத்துழைப்பின் (SDC) 20 ஆண்டுகள்

இந்நிகழ்வில் அரசாங்கப் பங்காளர்கள், சமூகப் பிரதிநிதிகள், பங்காளர் அமைப்புகள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் ஒன்றுகூடி, இலங்கையுடனான சுவிற்சர்லாந்தின் நீண்டகால ஈடுபாடு குறித்து நினைவுகூரவுள்ளனர். குறிப்பாக அபிவிருத்தி ஒத்துழைப்பு, சமாதானம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி ஒத்துழைப்பு, சமாதானம் மற்றும் மனித உரிமைகள், மனிதநேய உதவிகள் ஆகிய துறைகளில் சுவிற்சர்லாந்தின் பங்களிப்பை மையமாகக் கொண்ட ஆவணப்படம் ஒக்டோபர் 3 ஆம் திகதி சனிக்கிழமை திரையிடப்படவுள்ளது.

அத்துடன், இத்துறைகளில் பங்களிப்புச் செய்தவர்களும் நிகழ்வின்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இவ்வருட ஆரம்பத்தில் கொழும்பில் காட்சிப்படுத்தப்பட்ட “70 ஆண்டுகள் | 70 முகங்கள்” (70 Years | 70 Faces) என்ற புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஏழு தசாப்தங்களாக நீடிக்கும் சுவிற்சர்லாந்து – இலங்கை இருதரப்பு உறவுகளின் தனிப்பட்ட கதைகளை இந்தக் கண்காட்சி சித்தரிக்கிறது.

ஒக்டோபர் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, எதிர்கால பொருளாதார அபிவிருத்தி, புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய தலைப்புகளில் நிபுணர்களின் குழு கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

இந்த நினைவு நிகழ்வு, சுவிற்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை வடிவமைத்த மக்களையும் அவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிப்பதுடன், எதிர்காலத்தில் கலந்துரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஏழு தசாப்த கால உறவை மீள்பார்வையிடுவதுடன், எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இந்த இருநாள் நிகழ்வு களமமைக்கவுள்ளது.