இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான கொடி ஏற்றப்பட்டது
நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி சபை ஆகியவை இணைந்து சர்வதேச SDG கொடி நாளை முன்னிட்டு கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தில் நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG) கொடியை ஏற்றின. இந்த நிகழ்வில் இராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, 2030ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கையின் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
நெதர்லாந்து இராச்சியத்தின் தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கை நிலையான அபிவிருத்தி பேரவை ஆகியன இணைந்து சர்வதேச நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDG) கொடி தினத்தை முன்னிட்டு, தூதரக வளாகத்தில் இன்று SDG கொடியை ஏற்றின.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer, இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் இணைந்து SDG கொடியை ஏற்றினர்.
இந்நிகழ்வில் கொழும்பை தளமாகக் கொண்டு செயற்படும் இராஜதந்திரிகள் மற்றும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிக்கும் சிவில் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer, SDG கொடியை ஒன்றாக ஏற்றுவதன் மூலம் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட முடியும் என தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டை நோக்கிய SDG இலக்குகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், உலகின் பல நாடுகளில் கட்டடங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளில் SDG கொடி ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche, பல்தரப்பு ஒத்துழைப்பு சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், நிலையான அபிவிருத்தி இலக்குகள் போன்ற பகிரப்பட்ட கட்டமைப்பு முன்னெப்போதையும் விட முக்கியமானதாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
அரசாங்கம், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோருக்கு பொதுவான அணுகுமுறையையும், முன்னேற்றத்தை வெளிப்படையாக கண்காணிப்பதற்கான பகிரப்பட்ட அளவுகோல்களையும் SDG கட்டமைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் காலங்களைத் தாண்டி தொடரக்கூடிய திட்டமிடலுக்கு இது ஆதரவளிப்பதுடன், நிதி வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தற்போதைய சூழலில் உள்நாட்டு முயற்சிகளை சர்வதேச ஆதரவுடன் இணைக்க உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொடி ஏற்றும் நிகழ்வைத் தொடர்ந்து, இராஜதந்திர சமூகத்தினருக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
2030ஆம் ஆண்டுக்குள் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் பயணம், இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் காணப்படும் வாய்ப்புகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
2015 செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து 193 உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான உலகளாவிய செயல் திட்டமாகும்.
editor