ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை – தன்னார்வலர் அங்கீகார தினம் 2026
ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை தன்னார்வலர் அங்கீகார தினம் 2026ஐ நடத்தி, இலங்கையின் சமூக மாற்றத்துக்கு பங்களித்த 2,500 தன்னார்வலர்களை கௌரவித்தது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF), இலங்கை முழுவதும் நேர்மறையான சமூக மாற்றங்களை உருவாக்குவதற்காகத் தமது நேரம், திறன்கள் மற்றும் முயற்சிகளை அர்ப்பணித்த ஊழியர்கள் மற்றும் வணிகக் குழுவினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில், குழுமத்தின் தலைவரின் தலைமையின் கீழ் தனது வருடாந்த தன்னார்வலர் அங்கீகார தினத்தை நடத்தியது.
ஜுலை 28ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சிரேஷ்ட தலைமைத்துவ அங்கத்தவர்கள், குழும தலைமை அதிகாரி கிரிஷான் பாலேந்திராவின் தலைமையின் கீழ் பங்கேற்றனர். 2025/26 காலப்பகுதியில் சிறப்பாக செயலாற்றியிருந்த தன்னார்வலர்களுக்கு வெகுமதியளிக்கும் நிகழ்வாக இது அமைந்திருந்தது.
குழுமத்தின் சமூக பொறுப்புணர்வுச் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி காமலின் ஜயசூரிய குறிப்பிடுகையில், “கடந்த ஆண்டில் தன்னார்வத் தொண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதுடன், 2,500 தன்னார்வலர்கள் 4,842 சந்தர்ப்பங்களில் 105,096 மணிநேரப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக, சுற்றாடல் சார்ந்த திட்டங்கள், “தித்வா” நிவாரணப் பணிகள் மற்றும் ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரசித்தி பெற்ற கலா பொல ஆகியவை ஆண்டின் அதிகளவிலான தன்னார்வலர் பங்கேற்பைப் பதிவுசெய்து, எமது கூட்டுச் சேவையின் பரந்த தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன், JKF உடன் இணைந்து முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உட்பட, குழுமத்தின் வணிக அலகுகள் ஊடாக அதிகரித்து வரும் மூலோபாய ரீதியிலான மற்றும் நோக்கம் சார்ந்த தன்னார்வத் தொண்டினைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
அதில் ஒன்று, இன்றைய தினம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. JKF தனது 21வது ஆண்டு நிறைவைப் பதிவுசெய்துள்ள நிலையில், குழுமம் முழுவதிலுமான தன்னார்வப் பணிகளின் முழுமையான செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காகத் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்தியேக Volunteer App, ஒரு முக்கிய நினைவுச் நடவடிக்கையாக அமைந்ததுடன், குழுமத்தின் நிர்வாகக் குழு உட்பட 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்களிடையே ஏற்கனவே நன்மதிப்பையும் பயன்பாட்டையும் பெற்றுள்ளது.” என்றார்.
JKF உடன் இணைந்து குழும வணிகங்களால் நடைமுறைப்படுத்தப்படும் மூலோபாய ரீதியிலான மற்றும் நிலையான சமூக அபிவிருத்தித் திட்டங்களை அங்கீகரிப்பதற்காக ஒரு சிறப்பு விருதை அங்குரார்ப்பணம் செய்வதற்கும் இந்நிகழ்வு சாட்சியமாக அமைந்தது. சினமான் லொட்ஜ் ஹபரண மற்றும் ஹபரண வில்லேஜ் பை சினமான் ஹோட்டல் குழுவினர் கூட்டு மதிப்பை உருவாக்குவதில் காட்டிய முன்முயற்சி, தாக்கம் மற்றும் நீடித்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி ஹபரண தேனீ வளர்ப்புத் திட்டம் குழுவினர் முதலாவது சிறப்பு விருதை வென்றெடுத்தனர்.
இந்நிகழ்வில் திட்டத்தின் சமூகத் திட்ட ஒருங்கிணைப்பாளரும் தேனீ வளர்ப்பாளருமான வசந்த பண்டார தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். "எனக்கு தேனீ வளர்ப்பில் தொழில்நுட்ப பின்னணி எதுவும் இருக்கவில்லை. சமூக உறுப்பினர்கள் முதன்முதலில் இத்திட்டத்தில் இணைந்தபோது, அதன் வெற்றி குறித்து எங்களுக்கு நிச்சயமற்ற தன்மையே இருந்தது. இன்று, ஜோன் கீல்ஸ் மற்றும் சினமன் ஹோட்டல் வழங்கப்பட்ட பயிற்சிகள், தொடர்ச்சியான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இவை, நிலையான நடைமுறைகள் மூலம் தேனீக்களைப் பாதுகாப்பதுடன், எமது வருமான சாத்தியக்கூறுகளை அதிகரித்து, இத்திட்டத்தை வளர்த்தெடுக்கவும் நீடித்திருக்கச் செய்யவும் எங்களுக்கு உதவியுள்ளன" என்றார். அத்துடன் ஒரு சிறப்பம்சமாக, இத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட முதற்கட்டத் தேன் உற்பத்தித் தொகுதி இந்நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு, சந்தைப்படுத்தலுக்கு முந்தைய விற்பனைக்காகக் கிடைக்கப்பெற்றதுடன், நல்விற்பனையையும் பதிவுசெய்தது.
ஜோன் கீல்ஸ் குழும தலைமை அதிகாரி கிரிஷான் பாலேந்திரா வாழ்த்துத் தெரிவிக்கையில், “2025/26 ஆம் ஆண்டில் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றிருப்பதைக் கண்டோம் - இது எண்ணிக்கையில் ஒரு பெரிய அதிகரிப்பாகும் - ஆனாலும் மேலும் அதிக தன்னார்வலர்கள் இணைய வேண்டும். எங்கள் குழுமத்தில் உண்மையிலேயே தனித்து நிற்பது அதன் தன்னார்வச் சேவை மனப்பான்மையேயாகும். உதாரணமாக, கலா பொல நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமையில் வெளிப்புறத்தில் நடைபெற்ற நிகழ்வாக இருந்தபோதிலும், நீல நிறக் கூட்டாண்மை உடைகளில் எமது குழுவினரைக் கண்டது மகிழ்ச்சியளித்தது.
ஜோன் கீல்ஸ் ஊழியர்களின் அர்ப்பணிப்பை மக்களால் அங்கு தெளிவாகப் பார்க்க முடிந்தது. “இலங்கையைக் மீளக்-கட்டியெழுப்பல்” திட்டத்திற்கு குழும நிறுவனங்கள் இணைந்து வழங்கிய 500 மில்லியன் ரூபாய் நிதியுதவி, இலங்கையின் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடையாகும். ஹபரண தேனீ வளர்ப்புத் திட்டத்தின் தேனைச் சுவைத்துப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்! இதுபோன்ற திட்டங்களும், ஹிக்கடுவையில் உள்ள Hikka Batiks மற்றும் ஜா-எல காளான் உற்பத்தித் திட்டம் போன்ற பல்வேறு 'ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி' திட்டங்களும், குழுமம் முழுவதும் இதுபோன்ற மேலும் பல நிலையான கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றன. அத்துடன், நமது ஊழியர்கள் இனிவரும் காலங்களில் “Volunteer App” ஐப் பயன்படுத்தி, முடிந்தவரை அதிகளவிலான நடவடிக்கைகளில் தங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு ஊக்குவிக்கிறேன்.” என்றார்.
இந்நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, ஆண்டு முழுவதும் விதிவிலக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய தன்னார்வலர்களை கௌரவித்தமை அமைந்திருந்தது. தன்னார்வ நேரம் மற்றும் தாக்கத்தில் நிலவிய சிறந்த பங்களிப்பைப் பதிவுசெய்த தன்னார்வலர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இலங்கையைப் பாதித்த தொடர் பேரழிவுகளுக்கு மத்தியிலும், “ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி – நித்துலேமட” திட்டத்தின்கீழ் JKF இனால் முன்னெடுக்கப்பட்டு, 2025 டிசம்பரில் மெடதும்பர பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட்ட மாதிரி முன்பள்ளித் திட்டத்திற்கு தனது நீடித்த அர்ப்பணிப்பையும் மதிப்புமிக்க பங்களிப்பையும் வழங்கியமைக்காக, விக்டோரியா கொல்ஃப் ரிசோர்ட்டின் பொறியியலாளரான சூரிய பண்டார ஹேரத் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.
தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்கு மேலதிகமாக, “தன்னார்வலர் அங்கீகார தினம் 2026”, 2025/26 ஆம் ஆண்டில் JKF இனால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தன்னார்வக் வலையமைப்பின் கூட்டுப் பங்களிப்பையும் விமரிசையாகக் கொண்டாடியது.
editor