நர்மதா ரங்கொடகேவின் பத்தாவது நாவல் ‘REBORN’ கொழும்பில் வெளியீடு
இலங்கை சிங்கள இலக்கிய எழுத்தாளர் நர்மதா ரங்கொடகேவின் பத்தாவது நாவலான ‘REBORN’ கொழும்பு மகாவலி கேந்திரத்தில் ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இலங்கையின் சிங்கள இலக்கியத் துறையின் பிரபல எழுத்தாளரான திருமதி நர்மதா ரங்கொடகேவின் புதிய நாவலான ‘REBORN’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி கொழும்பு மகாவலி கேந்திரத்தில் இடம்பெற்றது. தனது சொந்த பதிப்பகமான ‘அக்ஷர’ பிரசுரமாக இந்நூலை வெளியிட்டமை இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.
பாடசாலைப் பருவத்திலிருந்தே எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்த திருமதி நர்மதா ரங்கொடகே, 2016ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் எழுதிய ‘பாந்துரா’ நாவலை 2021 ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டு நாவல் இலக்கியத்தில் இணைந்தார். இவரது நாவல்களின் வரிசையில் அகரெஜின, உதாரா, பரி(ச்)சாரிக, சாஷா, லிய தம்பர, பிரேமாரம்மண, நீலோத்பலா, காமச்சந்த ஆகிய நூல்கள் அடங்குகின்றன.
வாசகர்களுக்கு ஒரு அற்புதம் நிறைந்த வாசிப்பிற்கு வழிவகுத்து இம்முறை வெளியிடப்பட்டுள்ள ‘REBORN’ நூலானது இவரது பத்தாவது நாவலாகும்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அத்துல ஜயகொடி, அச்சங்கத்தின் செயலாளர் லசித உமகிலிய, சரசவி பதிப்பகம், சுமித்ரா ராகுபத்த, தர்ஷனா ஷம்மி விஜேதிலக, சந்தி கொடிகார, மோகன் ராஜ் மடவல உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள், வாசகர்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் மற்றும் இலக்கியத் துறையின் முன்னோடிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இனிய பாடல்கள் மற்றும் அழைப்பாளர்கள் ஆற்றிய அர்த்தமுள்ள உரைகளுடன் இவ்விழா சிறப்பாக இடம்பெற்றது.
விழாவில் கருத்துத் தெரிவித்த திருமதி நர்மதா ரங்கொடகே: "இலக்கியத்தையும் புத்தகங்களையும் மிகவும் நேசிக்கும் ஒருவராக வாசகர் சமூகத்திற்கு எனது பத்தாவது நாவலையும் சமர்ப்பிக்கக் கிடைத்தமையை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அதேபோல என்னைப் போன்ற ஏனைய எழுத்தாளர்களுக்கும் தங்களது படைப்புகளைப் பிரசுரிப்பதற்காக அக்ஷர பதிப்பகத்தின் மூலம் எதிர்வரும் நாட்களில் வாய்ப்பளிக்க நாம் எதிர்பார்க்கிறோம். REBORN நூலை இரசிக்கும் அதேவேளையில், புதிய படைப்புகளை கையெழுத்துப் பிரதியாக மட்டும் வைத்திருக்காமல் வாசகர் சமூகத்திற்கு நூலாகச் சமர்ப்பிக்க எம்முடன் இணையுமாறு எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். எனக் கூறினார்.
‘REBORN’ நாவலைப் பிரசுரித்து, ஒரு புதிய நாவலின் தொடக்கம் எனும் கருப்பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘அக்ஷர’ புத்தகப் பதிப்பகமமானது, தனது நாவல் இலக்கியப் பயணத்தைத் ஆரம்பித்துள்ளது. தரமான வாசிப்பிற்காக அர்த்தமுள்ள கதைகளைப் பிரசுரித்தல், எழுத்தாளர்களை
ஊக்குவித்தல் மற்றும் ஒரு முதிர்ந்த வாசகர் சமூகத்தை உருவாக்குவதற்கு இந்நிறுவனம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
திருமதி நர்மதா ரங்கொடகே தனது நூல்களின் மூலம் இதுவரை இலங்கை இலக்கியத்திற்கு ஆற்றிய
சேவையையும் தாண்டி, படைப்பாளர்களின் புத்தகப் படைப்புகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளார். தனது பதிப்பகத்தின் மூலம் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள நூல்களை வாசித்து இரசிக்கவும், அறிவை தேடவும், எழுத்தாளர்களாக படைப்பிலக்கியத்தில் பிரவேசிக்கவும் புத்தகங்களை நேசிக்கும் உங்களுக்கு அவர் அழைப்பு விடுக்கிறார்.
editor