இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராகிறார் ஸ்ரீதர்

Sri Lanka Cricket has appointed Ram Krishnan Sridhar as the national team’s fielding coach until the end of the ICC Men’s T20 World Cup.

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராகிறார் ஸ்ரீதர்

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடியும் வரை, இலங்கை தேசிய அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ராமகிருஷணன் ஸ்ரீதரை நியமி த்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது.

இம் மாதம் 11ஆம் திகதியிலிருந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதிவரை ஸ்ரீதர் இந்த பதவியை வகிப்பார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நிலை 3 சான்றிதழ் பெற்ற பயிற்றுநரான ஸ்ரீதர், 2014 முதல் 2021 வரை இந்திய தேசிய ஆண்கள் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக செயற்பட்டு 300க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்களை வழிநடத்தி இருந்தார்.

இலங்கை தேசிய அணியின் களத்தடுப்பு தரத்தை உயர்த்துவதில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். மேலும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளின் விஜயத்தின்போதும் இலங்கை வீரர்களுடன் இணைந்து ஸ்ரீதர் பணியாற்றுவார். அதைத் தொடர்ந்து ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்துக்கு  வீரர்களை  தயார்படுத்தும் பணிகள் தொடரும்.

தனது நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீதர், 'இலங்கை வீரர்கள் எப்போதும் உள்ளுணர்வு திறமை, மீள்தன்மை மற்றும் கூட்டு மனப்பான்மைக்காக பாடுபட்டுள்ளனர். எனது பங்கு ஒரு அமைப்பை திணிப்பதல்ல, மாறாக விளையாட்டுத் திறன், விழிப்புணர்வு மற்றும் களத்தில் புகழ்ச்சி என்பபவற்றை இயல்பாகவே வீரர்கள் மத்தியில் வளரச் செய்வதாகும்' என்றார்.

இந்த வருட ஆரம்பத்தில் தேசிய உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் சிறப்பு களத்தடுப்பு திட்டத்தை 10 தினங்கள் நடத்திய ஸ்ரீதர், இலங்கை கிரிக்கெட்டுக்கு புதியவரல்லர்.

'பந்துகளைத் தடுத்து நிறுத்தும்போது வீரர்கள் ஒவ்வொருவரும் இணைந்து பாராட்டுகையில் களத்தடுப்பு திறமை பெறுகிறது. இலங்கையின் பலங்களான வேகமாக செயற்படும் கரங்கள், வேகமான உடல் அசைவுகள், துணிச்சலான எண்ணம் ஆகியவற்றை  இன்னும்  அதிகரிக்கச் செய்வதன்மூலம் களத்தடுப்பு மேன்மை அடையும்' என அவர் மேலும் கூறினார்.